நாமக்கல் சந்தைபேட்டைபுதூர் பக்கமுள்ள பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார்- சுஜாதா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் கலையரசி அருகிலுள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சுஜாதா தம்பி சிராஜ் அவரது மனைவி கவிதாவோடு அக்கா பிள்ளைகளை அழைத்து கொண்டு நாமக்கல் பரமத்தி ரோட்டிலுள்ள ஐ வின்ஸ் கடைக்கு சனிக்கிழமை ஷவர்மா சாப்பிட சென்றுள்ளார்.
சாப்பிட்டு வீட்டுக்கு வந்தவுடன் கலையரசிக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று காலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கலையரசி உயிரிழந்துவிட்டார். ஷவர்மா சாப்பிட்ட குடும்பத்தினர் நாமக்கல் அரசு மருத்துமனையில் அதிர்ச்சியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் இதே ஐ வின்ஸ் கடையில் சனிக்கிழமையன்று ஷவர்மா சாப்பிட்ட நாமக்கல் மருத்துவ கல்லூரி மாணவிகள் 13 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்போதே உடனடியாக ஹோட்டலுக்கு விசிட் செய்த நாமக்கல் ஆட்சியர் உமா கெட்டு போன இறைச்சிகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு அழிக்க சொன்னது குறிப்பிடதக்கது. ஹோட்டல்காரர்களை நேற்று ஆட்சியர் எச்சரிக்கை செய்த நிலையில், இன்று மாணவி உயிரிழந்திருப்பது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஷவர்மா சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷவர்மா சாப்பிட்டு கலையரசி என்ற சிறுமி உயிரிழந்த நிலையில் அவரது தாய் சுஜாதா, தம்பி பூபதி, மாமா சினோஜ் , அத்தை கவிதா ஆகிய 4 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கே.பழனிவேல்