விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு சான்றிதழ் மற்றும் வைர நெக்லஸ் பரிசளித்தார். நந்தினி தனது குடும்பத்துடன் வந்து நடிகர் விஜய்யிடம் இருந்து பரிசை பெற்றுக்கொண்டார்.
இதில் நடிகர் விஜய் பேசுகையில், ‘இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு காரணம். சமீபத்தில் ஒரு படத்தில் காடு இருந்தா எடுத்துக்குவாங்க. பணம் இருந்தா புடுங்கிடுவாங்க. படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது என, வரும். அது என்னை பாதித்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை.
நிறைய பேர் ஒன்னு சொல்லி கேள்விப்பட்டுருப்பீங்க. உன் நண்பனை பத்தி சொல்லு. நான் உன்னை பத்தி சொல்றேன்னு. எனக்கு தெரிந்து, இப்ப அதெல்லாம் மாறிடுச்சுன்னு நினைக்கிறன்.
நீ எந்த சோசியல் மீடியா பேஜை ஃபாலோ பன்றேன்னு சொல்லு? நான் உன்னப் பத்தி சொல்றேன். அப்படின்றதுதான் இன்றைய ஒரு புதிய மொழி. இதன் மூலம் நீங்கள் சோசியல் மீடியாவில் எந்த கருத்தை கொண்டவர்களை ஃபாலோ பன்றீங்க? என்பது முக்கியம்’ என கூறினார்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஷபுல் ஹசீனா என்ற மாணவி நடிகர் விஜய்யிடம் சான்றிதழ் பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது திடீரென மாணவி பேசுகையில், ‘நடிகர் விஜய்யை உண்மையான அண்ணனாக பார்க்கின்றேன். அவரது திரைப்படங்களுக்கு எத்தனை தடை வந்தாலும், பல கோடிகள் சம்பாதித்துவிடும்.
ஒரு வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மிகவும் ஆழமாக மனதில் பதியும் விதமாக படத்தில் சொல்லி உள்ளார். அடுத்த ஆண்டு நான் செலுத்த போகும் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது? என்பதை புரிந்துகொண்டேன்.
விஜய் அண்ணா வர வேண்டும் என்பது எனது ஆசை. அவர் சினிமா மட்டும் இல்லாமல், அனைத்து துறைகளிலும் கில்லியாக இருக்க வேண்டும். 'எல்லா புகழும் ஒருவனுக்கே' என்ற பாடலில் சொன்னதை மனதில் ஏற்றிக்கொண்டதால் இன்று இந்த பரிசை பெற்றிருக்கிறேன்.
அதேப்போல் நான் செலுத்தப்போகிற வாக்கை நீங்கள் மதிப்புமிக்கதாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தனி ஒருவனாக இல்லாமல் எங்களது தலைவனாக நீங்கள் வர வேண்டும்’ என்று விஜய்யிடம் மாணவி கேட்டுக்கொண்டார்.