காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்களுக்காக கடந்த 1994ம் ஆண்டு அரசு சார்பில் 40க்கு மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.
இதில் அதே பகுதியை சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் கடந்த 29 ஆண்டுகளாக தங்களது கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் முனுசாமி என்பவர் வசித்து வந்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி ஜமுனா, அவர்களது 6 வயது சிறுமி காயத்ரி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயர் தப்பினர்.
கடந்த சில ஆண்டுகளாகவே இங்குள்ள அரசு தொகுப்பு வீடுகளின் சுவர் உடைந்து பிளந்த நிலையிலும், வீட்டின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, கட்டிட கம்பிகள் நீட்டியவாறு சேதமடைந்தும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், பருவமழை காலங்களில் மேற்கூரையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீடுகளுக்குள் உட்புகுவதால் அப்பகுதியினர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக உயிர்பலி ஏற்படும் சூழலில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றி புதிய வீடுகள் கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை மனு அளித்து வந்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை அதிகாரிகள் எவ்வித ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதியினர் வேதனையுடன் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த அரசு தொகுப்பு வீடுகளின் கட்டிடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கையாக இருக்கிறது.