வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறவாசத்துக்குப் பிறகு சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் விடுதலையாகினர்.
சசிகலா, இளவரசி இருவரும் பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு சிறைத்துறை டிஐஜி ரூபா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். சுடிதார் அணிந்து சசிகலா பரப்பன அக்ரஹார சிறையை விட்டு வெளியே சென்று திரும்பி வந்த சிசிடிவி காட்சிகள் அப்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பரப்பன அக்ராஹார சிறையில் இருக்கும் போது சொகுசு வாழ்க்கை அனுபவிக்க அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி இருவரும் தொடர்ந்து ஆஜராகவில்லை.
இதனால் சசிகலா, இளவரசி இருவருக்கும் பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.