தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மலையடிவார கிராமம் அழகாபுரி. இந்த கிராமம் ராஜாக்கால்பட்டி ஊராட்சியை சேர்ந்த குக்கிரமமாகும். இக்கிராமத்தில் கடந்த 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக இறந்தவர்களை புதைப்பதற்காக பெரியவர்களுக்கு என தனி மயானமும், குழந்தைகளுக்கு என தனி மயானமும் பயன்பாட்டில் உள்ளது.
இதில் குழந்தைகள் மயானம் 20 சென்ட் பரப்பளவில் அழகாபுரி கிராமத்திற்கு அருகே கிழக்கு தோட்டப்பகுதியில் தனியாக அமைந்துள்ளது. மணல் சரிவுள்ள இந்த பகுதியில் இரவு நேரங்களில் ஜேசிபி, டிராக்டர், மாட்டுவண்டிகள் மூலமாக தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு அவை அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கிராம மக்கள் வருவாய் துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து, தெப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலர், ராஜதானி வருவாய் ஆய்வாளர், நில அளவையர் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஊருக்கு பொதுவான குழந்தைகள் மயானத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் செரீப் , "அந்தப் பகுதி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, முழுமையாக விசாரணை செய்து, காவல் துறையினர் உடன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.