உதயநிதியின் தலைக்கு 10 கோடி என்ற அயோத்தி சாமியார் அறிவிப்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குமுன்னரே அடுத்ததாக அவரை காலணியால் அடித்தால் 10 இலட்சம் என்ற அறிவிப்பை ஆந்திர இந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஜன ஜாகரன சமிதி வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”டெங்கு, காலரா, கொரோனாவை போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும்" என பேசி உள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பீகார், டெல்லி உள்ளிட்ட இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சனாதனம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மகாராஷ்டிராவிற்குள் நீங்கள் நுழைய முடியாது என அம்மாநில அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அயோத்தி சாமியார் ஒருவர், ’உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும், மதுரையில் அயோத்தி சாமியார் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், சனாதனம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதியின் கன்னத்தில் காலணியால் தாக்குபவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆந்திராவில் செயல்பட்டு வரும் இந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஜன ஜாகரன சமிதி அறிவித்துள்ளது.
ஏற்கனவே, சனாதன தர்ம சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”என் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளார் அயோத்தி சாமியார். உங்களுக்கு எப்படி ரூ.10 கோடி கிடைத்தது.இதுபோன்ற எதிர்ப்பை எனது தாத்தா நிறைவே பார்த்துள்ளார்.ஆகையால் நான் அஞ்சப்போவது இல்லை. எனது தலையை சீவ எதற்கு ரூ.10 கோடி, 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும் சீவலாம் என தனது தாத்தா கலைஞர் பாணியில் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.