சேலம்: காருக்குள் போதை ஊசி போட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் கைது - காவல்துறையினர் தீவிர விசாரணை

கடந்த சில வருடங்களாகவே இப்படி வலி நிவாரணி மாத்திரையை போதை ஊசியாக பயன்படுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
சேலம்: காருக்குள் போதை ஊசி போட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் கைது - காவல்துறையினர் தீவிர விசாரணை

சேலத்தில் காருக்குள் போதை ஊசி போட்டுக் கொண்டிருந்த 8 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் டவுன் மார்க்கெட் பகுதியில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் அருகில் சொகுசு கார் ஒன்று நின்றிருந்தது. அதனுள் ஒன்பது பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் போதை ஊசி போட்டுக் கொண்டிருப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்றனர். காவல்துறையினரைக் கண்டதும் காரில் இருந்து இறங்கி ஒரு வாலிபர் ஓட்டம் பிடித்தார். மற்றவர்களைக் காருக்குள் இருந்தபடியே போலீசார் மடக்கி பிடித்தனர். அப்பொழுது காருக்குள் போதை ஊசிகள் இருந்தன. உடனே எட்டு பேரையும் டவுன் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் மோகன் பாபு கண்ணா தலைமையில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இச்சம்பத்தில் ஈடுபட்டவர்கள், சேலம் மாநகரப் பகுதிகளை சேர்ந்த தனிஷ், தனசேகர், ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ணன், சந்தோஷ், யாசின், ஸ்டாலின், மோகன்ராஜ் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் மோகன்ராஜ்க்கு சொந்தமான சொகுசு காரில் டவுன் அம்மா உணவகம் பகுதிக்கு வந்து வலி நிவாரணி மாத்திரைகளை குளுக்கோஸ் பாட்டிலில் போட்டு கரைய வைத்து அந்த தண்ணீரை சிரஞ்சு மூலம் உடலில் ஏற்றியதும், கடந்த சில வருடங்களாகவே இப்படி வலி நிவாரணி மாத்திரையை போதை ஊசியாக பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய இளைஞரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் கைது செய்யப்பட்ட அனைத்து இளைஞர்களையும் காவல்துறையினர், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் கொடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கிய நிலையில், தினம்தோறும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து இளைஞர்களும் மனநல மருத்துவ மையத்திற்கு வர வேண்டும் என்றும், அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் கவுன்சிலிங்கை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அனைத்து இளைஞர்களையும் அவர்களது குடும்பத்தாரை வரவழைத்து அவர்களுடன் திருப்பி அனுப்பி வைத்தனர். காருக்குள் இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொண்ட சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தையடுத்து சேலம் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வாங்கும் நபர்கள் மற்றும் சிறப்பு வாங்கும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com