சேலம் அருகே மனைவியின் தகாத உறவை தட்டிக்கேட்டதால் ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சீல்நாயக்கன்பட்டி பக்கமுள்ள தாதகாபட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். அந்த பகுதியில் பிரபல ரவுடியாக விளங்கிய இவர் மீது கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த வருடம் ரேஷன் அரிசி கடத்தல் சம்மந்தமாக ரஞ்சித்குமார் மேல் புகார் இருந்தது. அதைப் பற்றி விசாரிக்க சென்ற வி.ஏ.ஓ -வையும் தாக்கியுள்ளார். இதனால் ரஞ்சித்குமார் மீது வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கைது செய்து அவரை சேலம் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்தார் ரஞ்சித்குமார்.
ரவுடி ரஞ்சித்குமாருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியை பிரிந்து 2-வது மனைவி பிரியாவுடன் அயோத்தியாபட்டணம் பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த 20 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தவர் ரெண்டு நாளைக்கு முன்பாக காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 2-வது மனைவி போலீசில் புகார் கொடுத்து தேடிகொண்டிருக்க, நேற்று உடையாபட்டி வேடியப்பன் கோவில் அருகே ரஞ்சித்குமார் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். பிணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு ரஞ்சித்குமாரின் முதல் மனைவியுடன் சுரேஷ் என்பவர் பழகி வந்ததால் சுரேஷ்க்கும் ரஞ்சித்குமாருக்கும் முன்பகை இருந்தாக தெரிகிறது. இதனால் ரஞ்சித்குமார் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விசாரணை செய்யும் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசனிடம் பேசினோம். “பர்சனல் மோட்டீவ் காரணத்திற்காக கொலை நடந்திருக்கிறது. ரஞ்சித்குமாரின் சித்தப்பா ஒருவரும் இதில் ஈடுபட்டு இருக்கிறார். விசாரித்துக் கொண்டு இருக்கிறோம். முழுமையாக விசாரித்த பிறகுதான் சொல்ல முடியும்” என்றார்.