சேலம் கொண்டாலம்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை. இரண்டு வருடங்களுக்கு முன்பு பெருந்துறை சிப்காட் பகுதியை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளநிலையில் பிரியாவுக்கும்- ராஜதுரைக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரியா குடும்பத்தினர் கவலையடைந்து தம்பதி இருவரையும் சமாதனப்படுத்த சொந்தகாரர்கள் நான்கு பேரை அழைத்து கொண்டு பிரியா அப்பா- அம்மா மொத்தம் 6 பேர் பெருந்துறையிலிருந்து சேலத்திற்கு மாருதி ஆம்னி வேனில் வந்துள்ளனர்.
சேலம் கொண்டாலம்பட்டி வந்து தம்பதியினரிடம் சமாதானம் பேசியுள்ளனர். பிறகு ஒரு வாரம் மகள் தங்களுடன் இருக்கட்டும் என்று பிரியாவை அவர்கள் அழைத்து கொண்டு பெருந்துறை புறப்பட்டுள்ளனர். விடியற்காலை மூன்று மணி அளவில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் சின்னாகவுண்டனுர் என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இவர்கள் சென்ற ஆம்னி வேன் வேகமாக மோதியிருக்கிறது.
இதில் காருக்குள் இருந்த பிரியா, குழந்தை, பெற்றோர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மொத்தம் 8 பேர் ஆம்னி வேனில் சென்ற நிலையில் உறவினர்கள் இரண்டு பேரை தவிர மற்ற 6 பேர் விபத்தில் பலியாகினர். படுகாயமடைந்த இரண்டு பேர் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சங்ககிரி போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.