சேலம்: ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.100 கோடி மோசடி - தப்பிய வாலிபருக்கு சிக்கல்

சேலம்: ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.100 கோடி மோசடி -  தப்பிய வாலிபருக்கு சிக்கல்

ஆன்லைன் டிரேடிங் நடத்தி சுமார் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டு குடும்பத்துடன் தப்பியோடிய இளைஞரின் வீட்டுக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி சே.பெருமான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி 35 வயது மகன் நாகராஜ். பட்டதாரியான இவருக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் அதே பகுதியில் வசித்து வந்தார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றிய போது சுமார் 35லட்சம் ரூபாய் கையாடல்கள் செய்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தனியார் வங்கியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே ஆன்லைன் டிரேடிங் நடத்தி சமூக வலைத்தளங்களின் மூலம் சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள நபர்களிடம் அதிக அளவில் வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து ஆரம்பத்தில் 10ரூபாய் வட்டி வீதம் திருப்பிக் கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இருந்து பல நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் அதிகளவில் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிரதி மாதம் முதல் தேதியில் இருந்து 15 ம் தேதி வரை மூன்று தவணையாக என அவர்களுக்கு அந்தந்த மாதத்திற்கான வட்டிப் பணத்தை திருப்பி செலுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கொடுக்க வேண்டிய வட்டி பணத்தை யாருக்கும் செலுத்தாததால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்பொழுது நாகராஜின் செல்போன் அணைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நேரடியாக காடையாம்பட்டி அருகே உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு யாரும் இல்லாததால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நாகராஜ் மீது புகார் மனு அளித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை தேடிவந்தனர். சுமார் 100 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பிச் சென்ற நாகராஜ் குறித்து எந்த தகவலும் தெரியாததால் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வன், போலீசார் மற்றும் கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் முன்னிலையில் நாகராஜன் வீடு மற்றும் அவரது அலுவலகம் ஆகியவைகளுக்கு சீல் வைத்தனர்.

போலீஸாரிடம் பேசினோம். ' வங்கியில் சுருட்டிய பணத்தை வைத்து கார் வாங்கி ஆடம்பரமாக சுத்தியிருக்கார் நாகராஜ். மனைவிக்கு நகைகள், அப்பா, அம்மாவுக்கு விலையுயர்ந்த ஆடைகள் வாங்கி தந்து உறவினர்கள் விஷேசங்களுக்கு போயிருக்கிறார். சேலத்தில் பங்களா வாங்கியிருப்பதாகவும், அமெரிக்கா, லண்டனில் சில பிஸ்னஸில் பணத்தை போட்டு பெருக்குவதாக ஏமாற்றியுள்ளார். முதலில் உறவினர்களை ஆடம்பரத்தைக் காட்டி வலையில் வீழ்த்தி இருக்கிறார். பிறகு தன்னை நம்பியவர்களை பணத்தை கட்ட வைத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வட்டியைக் கொடுத்து ஆசை காட்டியிருக்கிறார்.

வட்டி வாங்கியவர்கள் அவர்களது உறவினர்களிடம் சொல்லி பணத்தை போட வைத்திருக்கிறார்கள். பணம் கோடிக்கணக்கில் சேர்ந்தவுடன் நெருக்கடி அதிகமாகியதும் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். கடைசி கட்டத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்து இருக்கிறார். கோவை, ஊட்டி அருகில் மோசடி பணத்தை கொண்டு சென்று செட்டில் ஆக இருப்பதாக தகவல். எங்க இருந்தாலும் பிடித்து விடுவோம்' என்கிறார்கள் காவல்துறையினர்.

பொருளதாரக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வனிடம் பேச முயற்சித்தோம். சார் வேறு ஒரு வழக்கில் பிஸியாக இருக்கிறார் என்றே தகவல் கிடைத்தது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com