’’அதிக மரணங்கள் ஏற்படுவதால் நீர்நிலைகள், காவிரி ஆற்றில் பெற்றோர்கள் கண்காணிப்பில் பிள்ளைகள் குளிக்க வேண்டும்’’ என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 15 மாதங்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் தவறியும், நீச்சல் தெரியமாலும் 156 பேர் பலியாகியுள்ளனர். அதிர்ச்சி அளிக்கும் இந்த தகவலால் அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள அறிக்கையில், '’கோடை விடுமுறையில் மகிழ்ச்சியைக் கொண்டாட பிள்ளைகள் நீர் நிலைகளுக்கு அருகில் சென்று விளையாடுவார்கள். நீச்சல் தெரியமால் செல்வதால் அசாம்பவிதம் நடந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. பிள்ளைகள் நீர் நிலைகளில் குளிப்பதென்றால், பெற்றோர்களின் கண்காணிப்பில் குளிக்க வேண்டும். என்று அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாவட்ட காவிரி நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ’’மேட்டூர், பூலாம்பட்டி, எடப்பாடி, தேவூர், கல்வடங்கம், புள்ளாகவுண்டம்பட்டி போன்ற காவிரி ஆற்றங்கரைகளில் அதிகமாக மாணவர்கள் குளிக்கிறார்கள். பெற்றோருக்குத் தெரியமால் வெளியூர் மாண்வர்களும் வந்து குளிக்கிறார்கள். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று குளித்து நீச்சல் தெரியமால் மாட்டி கொள்கிறார்கள்.
கடந்த 15 மாதங்களில் நீர் நிலைகளில் 156 பேர் இறந்துள்ளனர். இதில், காவிரி ஆற்று நீர் நிலைகளில் இறந்தவர்கள்தான் அதிகம். கல்வடங்கத்தில் சமீபத்தில் கூட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக, பெற்றோருக்கு தெரியமால் வந்து ஆற்றில் இறங்கி குளிக்கிறார்கள். நீச்சல் தெரியமால் ஆழம் அதிகமான இடத்துக்குச் சென்று உயிரை இழக்கிறார்கள். சிலர் மது அருந்திவிட்டு ஆற்றில் இறங்கி மரணத்தை தேடி கொள்பவர்களும் உண்டு. கோடை விடுமுறையை கொண்டாட அதிகம் பேர் காவிரிக்கு வருவார்கள். அதனை மனதில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது’’என்கின்றனர்.
எடப்பாடி தாசில்தார் பானுமதியிடம் இந்த எச்சரிக்கை குறித்து பேசினோம். ’’காவிரி கரையோரப் பகுதிகளில் தண்டோரா மூலமும், ஆட்டோ ஒலிபெருக்கி மூலமும், கிராம சபை கூட்டத்தில் துண்டு பிரசுரம் மூலமும் இதற்கான விழிப்புணர்வைச் சொல்லி கொண்டே இருக்கிறோம். காவிரி கரையில் குளிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’என்கிறார்.