சேலம் அருகே சொத்தை பிரித்து தரும்படி கேட்ட தம்பி தலை நசுக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பொன்னம்மாபேட்டை அடுத்தச் செங்கல் அணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகணபதி (42) .இவரின் மனைவி மீனாவை பிரிந்து பெற்றோருடன் செங்கல் அணை பகுதியில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தார். இவரின் மேல் தளத்தில் அண்ணன் செல்வம் அவரின் மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், பெற்றோர் பெயரில் உள்ள வீட்டை இரண்டு பாகமாகப் பிரித்து அண்ணனுக்கும், தனக்கும் வழங்க வேண்டும் என்று ராஜகணபதி கூறி வந்துள்ளார். அதற்கு அவரின் அண்ணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து அம்மா பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.
புகார் தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில், இன்று காலை வீட்டின் கீழ் தளத்தில் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக ராஜகணபதி கிடந்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் ராஜகணபதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்தை பிரித்து தரும்படி கேட்ட தம்பி தலை நசுங்கிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.