பாதி நேரம் போலீஸ் ஆடையிலும், மீதி நேரம் வனத்துறை அதிகாரியாகவும் வேஷமிட்டு வசூல் வேட்டை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி - சேலம் ரோட்டில் போலீஸ் வேடமிட்டு வாகன சோதனையில் நேற்று ஒருவர் ஈடுபட்டு இருந்தார். பைக்குகளை மறித்து ஆவணங்களைக் கேட்டுக் கொண்டு இருந்துள்ளார். மக்களும் பயத்தில் ஆவணத்தை காட்டிச் சென்றுள்ளனர். சரியான ஆவணங்கள் இல்லாதவர்கள் கையூட்டு கொடுத்துப் போயிருக்கின்றனர்.
மதியம் 2 மணி அளவில், வாழப்பாடி அருகே புதுப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீஸ் போல் ஆடை, ஷூ, தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக 'டிவிஎஸ் எக்ஸ்எல்' மொபட்டில் அத்தனூர்ப்பட்டி அருகே குமாரசாமியூர் பகுதியைச் சேர்ந்த பேங்க் ஆப்ரேட்டரான கந்தசாமி, 63. என்பவர் சென்றுள்ளார். கந்தசாமியின் மொபட்டை மடக்கி, ஆவணங்களை காட்டும்படி கேட்டுள்ளார். தான் வாழப்பாடி போலீஸ் என கந்தசாமியிடம் முருகேசன் தெரிவித்துள்ளார்.
முறையான ஆவணங்கள் இல்லாததால் 2 ஆயிரம் அபராதம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். கடுப்பான கந்தசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அங்கு கூடிய அப்பகுதி மக்கள் முருகேசனை சந்தேகித்து விசாரித்தனர். ' ஏம்பா வண்டியில பாரஸ்ட்ன்னு போட்டிருக்கு
போலீஸ்ங்கிற’’என்று கேட்டதற்கு ’’இப்ப நான் போலீஸ், மீதி நேரம் ரேஞ்சர். ரெண்டு போஸ்டிங் கவர்மெண்ட் கொடுத்திருக்கு’’என்று அலப்பறை செய்திருக்கார்.
இது குறித்து வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதிக்கு சென்ற வாழப்பாடி போலீசார், போலீஸ் போல் ஆடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட முருகேசனை கைது செய்தனர். அதேபோல், முருகேசன் 'ஹீரோ' பைக்கில் ஃபாரஸ்ட் என எழுதப்பட்ட பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது பற்றி வாழப்பாடி போலீசாரிடம் கேட்டோம். ‘’போலீஸ் போல் ஆடை அணிந்து முருகேசன் வசூலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு சொந்தமான பைக்கில் வனத்துறை அதிகாரி போல், பாரஸ்ட் என எழுதி, பல்வேறு இடங்களில் வனத்துறை அதிகாரி போல் மோசடியில் ஈடுபட்டு, பணம் பறித்துள்ளார். இவர் மீது ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் உள்ளன. இதையடுத்து வாழப்பாடி பகுதியில் போலீஸ் போல் ஏமாற்றியதற்காக, அரசு அதிகாரி போல் ஆடை அணிந்து மோசடியில் ஈடுபடுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.