சேலம் அருகே கவர்ச்சிகர முதலீடு திட்டத்தில் ரூ.500 கோடி வரை மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் தாதகாபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவருடைய மகன் வினோத்குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் என்ற பெயரில் கடந்த 2018-ல் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்கள்.
ஜஸ்ட் வின் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் ஓராண்டில் மொத்தம் ரூ.2.60 லட்சம் வழங்கப்படும் என்று கூறி விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை நம்பி சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். அவர்களில் பலருக்கும் சில மாதங்கள் வரை விளம்பரத்தில் குறிப்பிட்டபடி, முதலீட்டுக்கு ஏற்ப பணம் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் வழங்கப்படவில்லை.
இதனால் 2019-ம் ஆண்டு பணத்தை இழந்தவர்கள் சேலம் வந்து கலெக்டர், காவல்துறை என்று புகார் அளித்தனர். ஆந்திரா மாநிலத்திலும் ஜஸ்ட் வின்னில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளித்தனர். புகார் அதிகமானதுமே பாலசுப்ரமணியம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு 2022 ஆகஸ்டில் பாலசுப்ரமணியத்தை மனைவியுடன் கைது செய்தது சேலம் பொருளதார குற்றபிரிவு. ஆனால் வினோத்குமார் போலீஸ் பிடியில் சிக்காமல், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் நேற்று சேலம் வந்த வினோத்குமாரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பேசினோம். ' அப்பாவும், மகனும் சேர்ந்து 500 கோடி வசூல் செய்திருக்கிறார்கள். பாலசுப்ரமணியம் மோடி விகாஷ் விஷன் என்ற அமைப்பின் பேரை வைத்தும் மோசடி செய்துள்ளார். 110 பேர் இதுவரை புகார் தந்துள்ளார்கள். இவர்கள் எங்கே சொத்து வாங்கி போட்டுள்ளார்கள் என்பது விசாரணையில் தான் தெரிய வரும்." என்றார்கள்.
பொருளதார இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜனை தொடர்புகொண்ட போது நமது அழைப்பை ஏற்கவில்லை.