9ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி, காதல் வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கும் விருந்தாக்கிய திருமணமான இளைஞரின் கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், சூரமங்கலம் பகுதியில் 9 வகுப்பு மாணவி தந்தை, பாட்டியுடன் வசித்து வருகிறார். கருப்பூர், தேக்கம்பட்டியைச் சேர்ந்த வினீத் என்பவர் சூரமங்கலம் பகுதியில் காதலித்து திருமணம் செய்து மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் அருகாமையிலுள்ள மளிகைக் கடையில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார் 9 ம் வகுப்பு மாணவி ஒருவர். அப்போது மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார் வினீத்.
மாணவியிடம் நயவஞ்சகமாகப் பேசி தேக்கம்பட்டியில் தனியாக ஆள் இல்லாத வீட்டிற்கு அழைத்து சென்று இருக்கிறார் வினீத். அங்கு இரவு முழுவதும் மானவியை அடைத்து வைத்து பாலியல் பாலத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டு மிரட்டி இருக்கிறார். அடுத்து அவரது தம்பி விக்னேஷ், தேக்கம்பட்டி நண்பர்களான சீனிவாசன், ஒமலூர் நண்பர்களான ஆகாஷ், அருண்குமார் என பலரையும் வரவழைத்து மாணவியை பாலத்காரம் செய்யச் சொல்லி இருக்கிறார். அவர்களும் வினீத் பேச்சைக் கேட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மறுநாள் சூரமங்கலத்தில் மாணவியை விட்டு சென்றிருக்கிறார் வினீத். தனக்கு வினீத்தால் ஏற்பட்ட கொடுமையை பெற்றோரிடம் மாணவி சொல்லி அழ, அவர்கள் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மகளிர் காவலர்கள் உடனே விசாரித்து நடவடிக்கை எடுத்து, நண்பர்கள் 5 பேரையும் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மகளிர் காவலர்கள் கூறுகையில், ’’மாணவி கடைக்குச் செல்லும்போது செல்போன் எண்ணை வாங்கிப் பேசி காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான் வினீத். தோழியின் வீட்டுக்கு செல்வதாகச் சொல்லச்சொல்லி தேக்கம்பட்டிக்கு கூட்டிச் சென்று இப்படி அந்த மாணவியை நாசம் செய்திருக்கிறான். பள்ளி மாணவிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த மாதிரி கயவர்களிடம் ஏமாறக் கூடாது’’ என எச்சரிக்கிறார்கள்.
சூரமங்கலம் எஸ்.ஐ. மேனகாவிடம் பேசினோம். ’’போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம். மற்ற விபரங்களை இன்ஸ்பெக்டரிடம் கேளுங்கள்’’ என்றார். இன்ஸ்பெக்டர் சசிகலாவை தொடர்புகொண்டால் போன் ரிங் போனதே தவிர அழைப்பை எடுக்கவில்லை. இளம்பெண்கள், மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.