தலைவாசல் அருகே விவசாய தோட்டத்தில் பூமிக்கடியில் 22 லாரி டியூப்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தி வரப்பட்டு ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், ஆத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை அடிவாரப்பகுதியில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் ஊராட்சிக்குட்பட்ட வசந்தபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விவசாய தோட்டத்தில் பூமிக்கடியில் லாரி ட்யூப்கள் மூலம் சாராயத்தை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியலின் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது விவசாய நிலத்தில் உள்ள வாய்க்காலில் மூன்று அடி பள்ளம் தோண்டப்பட்டு 28 லாரி டியூப்களில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர் சாராய டியூப்களை தோண்டி எடுத்து பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் சேர்ந்த மனோகரன் என்கிற பெண்டு மனோகரன், அவரது மனைவி சந்திரா மகன் மணிகண்டன், தனலட்சுமி உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக மனோகரன், அவரது மனைவி சந்திரா, மகன் மணிகண்டன், மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, சுதன்(எ) சுதாகர், சூர்யா ஆகிய ஆறு பேர் மீதுவழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆறு பேரையும் தேடி வருகின்றனர்.