தங்க பத்திரத் திட்டம் முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்கள் என எல்லோரும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தங்கக் கட்டிகளை வாங்குவதற்கு பதிலாக இந்தப் பத்திரங்களை வாங்குவது நல்லது என வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஆபரணத்தங்கம் மற்றும் கட்டித் தங்கம் போன்றவற்றை வாங்குவதைக் குறைப்பதற்காகவே இந்த தங்க பத்திரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி கிடைக்கும். ஆனால் தங்க நகைகளுக்கு அப்படி வட்டி ஏதும் கிடைக்காது. இந்த வட்டி விகிதம் 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். ஆபரணத் தங்கங்களைப் போன்று இந்தப் பத்திரங்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து கடன்பெற முடியும்.
நமது நாட்டின் இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் தங்கம் உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பினை உண்டாக்குகிறது. தங்கத்தின் இறக்குமதியினை குறைப்பதற்காக, 2016ம் ஆண்டு, அரசாங்கம் தங்க பத்திரங்களை (Sovereign Gold bonds) அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட தங்கத்தினை கட்டிகளாக வாங்குவதற்கு சமமானது. ஆனால், இங்கு தங்க கட்டிகளுக்கு பதிலாக தங்கத்தின் மதிப்பானது காகிதமாகவோ(paper form) அல்லது டிமேட் கணக்காகவோ(Demat Account) இருக்கும்.இந்த நிலையில் தர்மபுரி கோட்டை அஞ்சலகங்களில் வரும் 11ஆம் தேதி முதல் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது என அஞ்சல் கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தர்மபுரி தலைமை அஞ்சலகம் மற்றும் 30 துணை அஞ்சலகங்களிலும் தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல் 4000 கிராம வரை வாங்கலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகள் ஆகும். 8ம் ஆண்டு இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்க பத்திரத்தை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5% வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும்.இந்தத் திட்டம் வரும் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தர்மபுரி தோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படும்.
அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தில் பணம் செலுத்துபவருக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 15 நாட்களுக்குப் பிறகு தங்க பத்திரம் வழங்கப்படும். இதில் முதலீடு செய்ய ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு அவசியம். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-பொய்கை கோ.கிருஷ்ணா