அ.தி.மு.க ஆட்சி காலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை இருந்ததாக அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த சங்கர், சுரேஷ், தரணிவேல் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.மேலும் சிலர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பிக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, ”அ.தி.மு.க ஆட்சியிலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்தது. அ.தி.மு.க-வினர் வளர்வதற்காக அதனைக் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர். கள்ளச்சாராயம் இப்போது வந்தது அல்ல, நீண்டகாலமாக உள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை நடந்துள்ளது. குட்கா வழக்குச் சட்டமன்றத்திலேயே பேசியுள்ளோம். இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். தி.மு.க ஆட்சியில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.