வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.10,000 அபராதம் - அதிர்ச்சி பின்னணி

தகவல் தர மறுத்த குற்றத்திற்காக மாநில தகவல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம்
இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம்

தகவல் தர மறுத்த இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன். இவர் சாலைக்கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலம் தொடர்பாக சில தகவல்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இளையான்குடி வட்டாட்சியர் அலுவலக பொதுதகவல் அலுவலரான தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் கடந்த ஆண்டு மனு செய்தார்.

ஆனால் அந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறி, முறையான தகவல்களை தரவில்லை. இதையடுத்து அவர் மேல்முறையீட்டு அலுவலரான வட்டாட்சியருக்கு மனு செய்தார். அவரும் வழக்கு நிலுவையை காரணம் காட்டி முறையான தகவல் கொடுக்கவில்லை.

தொடர்ந்து அவர் மாநில தகவல் ஆணையத்தில் மனு செய்தார். அதை விசாரித்த தகவல் ஆணையம், நீதிமன்றத்தில் தகவல் தர தடையாணை கொடுக்காத நிலையில், மனுதாரருக்கு 30 நாட்களுக்குள் உரிய தகவல்களை கொடுக்க கடந்த ஆண்டு செப்.15-ம் தேதி உத்தரவிட்டது. அதன் பின்னரும் தகவல் கொடுக்கவில்லை.

இதையடுத்து, ராதாகிருஷ்ணன் தகவல் தர மறுப்பதாக மாநில தகவல் ஆணையத்தில் மீண்டும் மனு செய்தார். இதை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஸ்ரீதர், மனுதாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com