சப் ரிஜிஸ்டரிடம் கணக்கில் வராத ரூ.3.50 லட்சம்: லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை

விருத்தாசலம் சப் ரிஜிஸ்டர் சங்கீதா மற்றும் அவரது உதவியாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப் ரிஜிஸ்டர் சங்கீதா மற்றும் உதவியாளர்
சப் ரிஜிஸ்டர் சங்கீதா மற்றும் உதவியாளர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டராக சங்கீதா(34) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் பத்திரப்பதிவு செய்பவர்களிடம் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாகவும் ஜி பே, போன் பே உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் பத்திர பதிவு செய்பவர்களிடம் பணம் பெற்றதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பெயரில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆய்வுக்குழு தலைவர் முருகன் மற்றும் போலீசார் திடீரென அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணம் இருந்துள்ளது. இந்த பணம் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திய போது உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் 10 மனைகள் வாங்கி தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து வந்துள்ளார்.

இதுவரை ரூ.42 லட்சம் கொடுத்துள்ள நிலையில் நேற்று மாலையில் ரூ.3.50 லட்சத்தை வீட்டுமனை நிறுவன உரிமையாளரிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து போலீசார் சப் ரிஜிஸ்டர் சங்கீதாவையும் அவருக்கு உதவியாக இருந்த அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமார்(37) ஆகிய இருவரையும் பிடித்து அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com