கேரள மாநிலம், திருவனந்தபுரம் கட்டக்கடா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகன் நவாஸ். இவர், பாம்பன் பகுதி கடற்கரையில் மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்று திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறார்.
வியாபாரம் நிமித்தம் மீன் வாங்குவதற்காக ஒவ்வொரு புதன்கிழமை அன்று மாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து லட்சக்கணக்கான பணத்துடன் காரில் புறப்பட்டு ராமநாதபுரம் பாம்பன் கடற்கரைக்கு வியாழன் அதிகாலை வந்து சேருவது வழக்கம்.
அந்தவகையில் ரூ.15 லட்சம் பணத்துடன் நவாஸ் நேற்று பாம்பன் கடற்கரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏர்வாடி-இதம்பாடல் துணை மின் நிலையம் அருகே வந்தபோது இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் திடீரென இவரது காரை வழிமறித்துள்ளனர்.
பின்னர், கத்தியைக் காட்டி மிரட்டி நவாஸ் வைத்திருந்த ரூ.15 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் நவாஸ் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் நடந்த இடத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பொருத்திய கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.