ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எஃப்.எஸ். போன்ற பெரும் மோசடி நிறுவனங்களை மிஞ்சக் கூடிய அளவிற்கு ஏழை மக்களிடம் மட்டுமே 1000 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளன தீபாவளி ஃபிராடு ஃபண்ட் நிறுவனங்கள். திருவண்ணாமலை எஸ்.பி.யிடம் ஏமாந்த ஏழை மக்கள் கண்ணீருடன் புகார் வாசிக்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வந்தவாசி, அனக்காவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பட்டாசு பண்டு வெகு பிரசித்தி. ஆரம்ப காலத்தில் பட்டாசு, இனிப்பு, தீபாவளி பிரியாணி செய்ய மளிகைச் சாமான்கள் என பணம் கட்டியவர்களுக்கு தொடர்ந்து நான்கு, ஐந்து ஆண்டுகள் சரியாக கொடுத்து நல்ல பெயரை வாங்கிக் கொண்டார்கள். அதன் பிறகு வெள்ளிக்காசு, அரை கிராம் தங்கம், ஒரு கிராம் தங்கம் என ஆரம்பித்து அதையும் சரியாக கொடுத்தார்கள்.
அதன் பிறகு கால் சவரன், அரை சவரன், வீட்டு மனை என ஆசையைத் தூண்டி விட்டனர். ஏற்கனவே நம்பிக்கையானவர்கள், ஏமாற்ற மாட்டார்கள் என பெயரெடுத்திருந்த இவர்களுக்கு மக்கள் 50,000 முதல் லட்சம் ரூபாய் வரை கட்டுவதற்கு பயப்படவோ, யோசனையோ செய்யவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவர் பெயரிலும் பணம் கட்டி இருக்கிறார்கள். இதற்கு பணத்தை வாங்கிப் போய் கட்டி விட்டு ரசீதுகளையும், ஒவ்வொரு ஆண்டும் பரிசுப் பொருட்களையும் பெற்றுத்தர அந்தந்த கிராமங்களில் முகவரிகளையும் நியமித்து வைத்திருந்தனர்.
இப்பொழுது அந்த முகவர்கள்தான் பணம் செலுத்தி ஏமந்தவர்களிடம் அகப்பட்டுக் கொண்டு விழி பிதுங்கி கிடக்கிறார்கள். அவர்கள் தான் நேற்று பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துப் போய் மனு கொடுக்க வைத்தார்கள். திருடனே திருடன் என்று கத்துகிற மாதிரி முகவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று புகார் கொடுத்திருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல, முகவர்கள் மூலம் பணம் செலுத்தி ஏமாந்த வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மக்களும் நொந்து போய் உள்ளனர். ’’தங்கம் போச்சு, பட்டாசு போச்சு, ஸ்வீட் பாக்ஸும் போச்சு. இந்த தீபாவளிக்கு பரிசு பொருட்களுக்கு கொடுத்து ஏமாந்தது போதும். நமது பேராசைகளுக்கு எல்லாம் நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டியதுதான்’’என்று பணம் கட்டி ஏமாந்த ஏழை மக்கள் புலம்பி வருகின்றனர்.
கண்ணு கெட்ட பிறகு..?
-அன்பு வேலாயுதம்