சென்னை: காவல் நிலையம் அருகே ரவுடி குத்திக்கொலை - வாலிபருக்கு வலை

காவல் நிலையம் அருகில் பிரபல ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பு
அப்பு

சென்னை பல்லவன் சாலை, காந்தி நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி அப்பு (எ) கல்லறை அப்பு (35). இவர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்பட 5க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரவுடி அப்பு தனது சொந்த ஆட்டோ ஓன்றை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் மெக்கானிக் கடை நடத்தி வரும் தனது நண்பரான விஜி (37) என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆனால், விஜி கடந்த 2 மாதங்களாக சரியாக வாடகை தராததால் அவரிடம் சென்ற அப்பு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், விஜி ஒழுங்காக வாடகை தந்துவிடுவதாக உத்தரவாதம் அளித்தும் மீண்டும் வாடகை தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி அப்பு இன்று விஜியின் கடைக்கு சென்று வாடகை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில், ஆத்திரம் அடைந்த விஜி கத்தியால் ரவுடி அப்புவை சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவலறிந்ததும் வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரவுடி அப்புவின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மெக்கானிக் விஜியை வலைவீசி தேடி வருகின்றனர். வில்லிவாக்கம் காவல் நிலையம் அருகில் நடந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com