டெல்லி ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த சம்பவத்தில் தில்லு தாஜ்பூரியா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தில்லு தாஜ்பூரியாவை கைது செய்தனர். இதன் பின்னர், டெல்லி திகாரில் உள்ள மண்டோலி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் திகார் சிறையில் ஜிதேந்தர் கோகி என்பவரது கும்பலைச் சேர்ந்த துண்டா என்ற யோகேஷ் மற்றும் அவரது நண்பர் தீபக் தீதர் ஆகியோருக்கும், தில்லு தாஜ்பூரியாவுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் யோகேஷ் மற்றும் தீபக் தீதர் ஆகியோர் சேர்ந்து இரும்புக் கம்பியால் தில்லு தாஜ்பூரியாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காயமடைந்த தாஜ்பூரியா டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சுயநினைவை இழந்த நிலையில் இருந்த தில்லு தாஜ்பூரியாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.