தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் ஓணான் செந்தில். பிரபல ரவுடியான இவர் மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. செந்தில் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வழக்குரைஞர்கள் அகிலன், பாரதிராஜா ஆகிய இருவருடன் திருவாரூர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பும் போது குடவாசல் அருகே நாகலூர் கிராமம் மெயின் ரோட்டில் திடீரென எதிரே வந்த கார் ஒன்று செந்தில் கார் மீது மோதியுள்ளது. என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் கார் கண்ணாடியை உடைத்த ஐந்து மர்ம நபர்கள் செந்திலை வெளியே இழுத்து அரிவாளால் பயங்கரமாக வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து வழக்குரைஞர் அகிலனையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டிய நிலையில், அவர் படுகாயம் அடைந்துள்ளார். மற்றொரு வழக்குரைஞர் பாரதிராஜா அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தில் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த வழக்குரைஞர் அகிலனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
இது குறித்து போலீசார் தரப்பில் ரவுடி செந்திலின் மீது விரோதம் கொண்ட ஏதோ ஒரு கும்பல் பழிக்குபழியாக இந்த கொலையை செய்துள்ளது. இவர் மீது பல வழக்குகள் உள்ளதால் யார்? எதற்காக? கொலை செய்தார்கள் என்பது விசாரணையில்தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
- ஆர்.விவேக் ஆனந்தன்