மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, பண்டாரவாடை கிராமம் கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் கலைவாணன் (40). பிரபல ரவுடி.
இவர் மீது, திருவாரூர் மாவட்ட தி.மு.க முன்னாள் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
கலைவாணன் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் அமர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்து சிதறியதில் கலைவாணனின் 10 விரல்கள் துண்டானது. ரத்தவெள்ளத்தில் அலறியபடி துடித்த அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரிடம், ‘மர்ம நபர்கள் என் மீது வெடிகுண்டு வீசியதால் கைகளில் உள்ள 10 விரல்கள் துண்டாகிவிட்டது’ என, கலைவாணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெரம்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் கலைவாணன் வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து, கைவிரல்கள் துண்டானது தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையே மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைவாணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொல்ல திட்டமிட்டு கலைவாணன் வெடிகுண்டு தயாரித்திருக்கலாம் என்றும், இந்த ரகசிய திட்டம் வெடிகுண்டு வெடித்ததால் வெளியே தெரிந்துவிட்டதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ‘இவர் 60 நாட்டு வெடிகளை வாங்கி அதில் இருந்த மருந்தை வெளியே எடுத்து பால்ரஸ், ஆணி உள்ளிட்டப் பொருட்களை அடைத்து வெடிகுண்டுகளை தயாரித்திருக்கிறார்.
அப்போது 2 குண்டுகளை செய்து முடித்துவிட்டு 3வது குண்டு தயாரிக்கும்போது வெடித்து சிதறியுள்ளது. ஏற்கனவே தயாரித்த 2 வெடிகுண்டுகளை அவரது மனைவியிடம் இருந்து கைப்பற்றி, அவரையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளோம். யாரை கொலை செய்ய வெடிகுண்டுகளை செய்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
- ஆர்.விவேக் ஆனந்தன்