குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும்- முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தூத்துக்குடியில் பேட்டி அளித்தார்.
முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்
முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

தூத்துக்குடி கல்லூரி ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்திருந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் இருக்கும் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மேலும் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ராக்கெட் ஏவுதளம் அமையும் இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதன் பிறகு கட்டுமான பணிகள் 12 மாதத்திற்குள் முடிவடையும். கட்டுமான பணிகள் முடிவடைந்ததில் இருந்து ஓராண்டுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். குலசேகரபட்டினத்திலேயே ராக்கெட்டுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 140 தனியார் நிறுவனங்கள் ராக்கெட் ஏவுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றன. தனியார் நிறுவனங்களின் வருகையால் இஸ்ரோ வளர்ச்சியில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com