’கொலை, கொள்ளை குற்றங்களை விட இப்போது இந்தக் குற்றம் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று போலீஸ் கமிஷனரே அதிர்ந்து அலர்ட் செய்யுமளவுக்கு ஒரு பிரச்னை பூதாகரமாகியுள்ளது என்றால் அது நத்திங் பட் சைபர் கிரைம்!
கோவையில் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி சமீபத்தில் ஒரு நிகழ்வை நடத்தியது. அதில் கலந்து கொண்ட கோவை சிட்டி போலீஸ் கமிஷனரான பாலகிருஷ்ணன், மாணவர்கள் மத்தியில் பேசுகையில், இணைய வழி குற்றங்களை பற்றி அழுத்தமாக பேசினார்.
“இப்போதெல்லாம் சூழல் மிக சென்சிடீவாக உள்ளது. கொலை, கொள்ளை குற்றங்களை விட சைபர் கிரைம் அதிகரித்துள்ளது. அது போல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியும் (A.I.) குற்றங்கள் அதிகம் நடத்தப்படுகின்றன. அறிமுகமே இல்லாத நபர்களால் நடத்தப்படும் இந்த குற்றங்களை கண்டறிவது கடினமாக இருக்கும். சவால்தான், ஆனாலும் சாதிக்கிறது காவல்துறை.
இணையம் வழியே குற்றம் செய்தால் எளிதாய் தப்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்பது போல் குற்றவாளிகளின் சிந்தனை மற்றும் செயல்பாட்டை தாண்டி காவல்துறை மின்னலாக செயல்படுகிறது. அதனால்தான் சைபர் கிரைம் குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்கிறோம். இருந்தாலும் விஸ்வரூபமெடுக்கும் சைபர் கிரைமானது சமூக ஆரோக்கியத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அதேப்போல் ட்ரோன் வாயிலாக நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வது மாதிரியான வலுவான பாதுகாப்பு வழிகளை கண்டறிய வேண்டியதும் அவசர அவசியம்” என்றார். கமிஷனர் அடித்திருக்கும் இந்த அலர்ட் அலாரம் மாணவர்களை நிமிர்ந்து அமர வைத்துள்ளது. சைபர் கிரைம் பற்றிய ஒரு விழிப்புணர்வு பல்பானது அவர்களின் மூளையில் பிரகாசமாகியுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
நாம் கமிஷனரிடம் பேசியபோது “இன்னைக்கு சூழல் அப்படித்தான் சவாலா இருக்குது. ‘நம்ம பிரைவசி நமக்கு மட்டுமே’ அப்படின்னு நினைச்சுட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நடந்துக்கிறாங்க. ஆனால் மூன்றாவது கண் ஒன்று எல்லாவற்றையும் பார்த்துட்டே இருக்கிறது மட்டுமில்லாம அதை பதிந்து கொள்ளவும் செய்யுது.
மொபைல் வழியே பர்ஷனல் விஷயங்களை அனுப்பிட்டு தைரியமா இருந்துக்கிறாங்க. ‘அனுப்பினேன், டெலிட் பண்ணிட்டேன், பிரச்னை முடிஞ்சது’ அப்படின்னு நினைச்சுக்கிறாங்க. ஆனால் அப்படியில்லை நிலைமை. ஹேக்கர்ஸ்கள் பெருகி நிற்கிறாங்க. எளிமையாக மக்களின் பிரைவசி விஷயங்களை திருடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களை செய்றாங்க.
சைபர் கிரைம் பேர்வழிகள் எட்டடி பாய்ந்தால் காவல்துறை பதினாறு அல்ல அறுபத்தோறு அடிகளே பாய்ந்து மடக்குதுதான். ஆனாலும் தனி மனுஷங்க கட்டுப்பாடாவும், அலர்ட்டாகவும் இருந்துகிட்டா இந்த சிக்கலே எழாது இல்லையா! மனச கட்டுப்படுத்தினாலே எல்லாம் சுமூகமா போகும்” என்கிறார்.
-ஷக்தி