இந்துக்களுக்கான பண்டிகைகள் வரிசை கட்ட துவங்குவது விநாயகர் சதுர்த்தியோடு தான். இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி என்பது பண்டிகை நேரம் மட்டுமல்ல பயம் நிறைந்த சூழலாகவும் மாறியது தான் காலத்தின் கோலம். இந்தியாவில், தமிழகத்தில் மதமோதல் வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்திக்கான சிலைகளை வைத்தல் மற்றும் அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்தல் ஆகியவை மிக மிக சென்சிடீவாகவே பார்க்கப்படும். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிக பலமாகவே செய்யப்படும்.
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 18ம் தேதிக்கு சில நாட்கள் முன்பாக தான் பாதுகாப்பான சதுர்த்தி கொண்டாட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டன.
அப்போது விநாயகர் சிலைகளின் உயரம் தரை தளத்திலிருந்து பத்து அடிக்குள் தான் இருக்க வேண்டும், ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட சிலைகளை வைக்க கூடாது என்றெல்லாம் அட்வைஸ் செய்தனர். இது சிலை அமைப்பாளர்களை அதிர வைத்தது. காரணம், சிலைக்கு எப்பவோ ஆர்டர் கொடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிய இருக்கும் தருவாயில் இப்படியொரு ஆர்டரா? என்று புலம்பினர்.
இது பற்றி நமது குமுதம் டிஜிட்டல் தளத்திலும் "இதுதானா உங்க டக்கு ஆஃபீஸர்ஸ்?" என்று ஒரு கட்டுரை எழுதி, கேள்வியும் எழுப்பியிருதோம். அதில் "இவ்வளவு லேட்டாக இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றிட வாய்ப்பே இல்லை. ஒரு வேளை எல்லாம் கண் துடைப்புக்கு தானோ?" என்று கேட்டிருந்தோம்.
பல இடங்களில் விநாயகர்களின் சிலைகள் பத்து என்ன பனிரெண்டு, பதினைந்து அடி உயரத்துக்கு கூட இருந்தன. நாம் அன்று குறிப்பிட்டது போலவே விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் வெறும் கண் துடைப்பாகதான் இருந்தன.=
நாம் இதுபற்றி பொது மக்களிடம் கேட்டபோது "திமுக அரசாங்கம் தெளிவாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன், விநாயகர் சிலை அமைப்பு பற்றி கண்டிஷன் போடுவேன். ஆனால் நீங்கள் அதை ஃபாலோ பண்ண வேண்டிய அவசியமில்லை. உங்கள் விருப்பத்திற்கு எல்லாம் அமைத்து, ஆசை தீர கொண்டாடி கொள்ளுங்கள். எங்கள் காவல் துறையும், அதிகாரிகளும் எதையும் தடுக்க மாட்டார்கள்" என்று சொல்வது மாதிரி இருக்கிறது இந்த போக்கு! எல்லாம் தேர்தல் அரசியல்தான்" என்றார்கள்.
- ஷக்தி