மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன் - கண்டக்டரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தனியார் பள்ளி மாணவர்கள்

சிறுவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று சிற்றுண்டி வாங்கிக்கொடுத்த இன்ஸ்பெக்டர் பின்னர் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ்
போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ்

அரசுப்பேருந்தில் நேற்றிரவு, தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையில் சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறி, சென்னையை சுத்தி பாக்க போறோம்! என்று சொல்ல கண்டக்டர் அதிர்ந்து போனார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு எட்டு மணிக்கு சென்னை செல்ல பஸ் தயாராக இருந்தது.அப்பொழுது பின் இருக்கையில் பள்ளியில் படிக்கும் வயதில் இரண்டு மாணவர்கள் தனியார் பள்ளி சீருடையில் இருந்தனர்.இதற்கு முன்பு இவர்களை இந்த பேருந்தில் என்றும் வந்ததில்லை.

இதை அறிந்த கண்டக்டர் துரை என்பவர் பணிமனை மேலாளர் சேட்டுவிடம் தகவல் சொன்னார். அவர்கள் அணிந்திருந்த சீருடை திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் சீருடை என்பதும், அவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றும் தெரிந்தது. உடனே திருப்பத்தூரில் உள்ள அந்த பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

ஏற்கனவே அந்த சிறுவர்கள் பள்ளி விட்டு நீண்ட நேரம் வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு காத்திருந்தனர். இதையடுத்து திருப்பத்தூர் போலீசார் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க செங்கம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அந்த சிறுவர்களை போக்குவரத்து பணிமனையில் இருந்து அழைத்து வந்தனர்.

அப்போதுதான் அவர்கள் சென்னையை சுற்றி பார்க்க ஆசைப்பட்டு திருப்பத்தூரில் இருந்து செங்கம் பஸ் ஏறி, அங்கிருந்து சென்னைக்கு செல்ல பஸ்ஸில் ஏறியது தெரியவந்தது. அவர்களை காவல் நிலையம் அழைத்து போய் சிற்றுண்டி வாங்கிக்கொடுத்த இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பெற்றோர்கள் பேச்சைக்கேட்டு, நன்றாக படிக்க அவர்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் சிறுவர்களது பெற்றொர் செங்கம் காவல் நிலையம் வந்து தங்கள் மகன்களை மீட்டுச் சென்ற்னர்.

நல்ல நேரம் இங்கேயே அவர்களை மீட்டனர். ஒருவேளை சென்னைக்கு போயிருந்தால்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று சிறுவர்கள் பெற்றோர்கள் போக்குவரத்து ஊழியர்களுக்கும்,போலீசாருக்கும் நன்றி தெரிவித்து தங்கள் மகன்களை அழைத்து போனார்கள்

- அன்புவேலாயுதம்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com