திண்டுக்கல்: பெண்ணின் சடலத்துக்கு ஐ.சி.யு-வில் சிகிச்சையா? - அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஐ.சி.யு-வில் பெண்ணின் சடலத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி, போராட்டம் நடத்திய உறவினர்களை போலீசார் தாக்கி, விரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராம். வெல்டிங் பட்டறையில் கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்திரா தேவி (20). கர்ப்பிணியாக இருந்த இந்திரா தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திரா தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய் இந்திரா தேவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி மருத்துவமனையின் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உறவினர்களிடம் யாரிடமும் தெரிவிக்காமல் ஐ.சி.யு வார்டில் வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி வந்துள்ளனர்.

இந்திரா தேவியின் தாய் உள்ளே சென்று பார்த்தபோது மகளின் நாக்கு வெளியே வந்த நிலையில், அவரது மூக்கில் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் இறந்த இந்திரா தேவியின் சடலத்தை பிணவறைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கேட்டதும் இந்திரா தேவியின் தாய் சந்தேகம் அடைந்து உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் நகர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்ததால் ஆண், பெண் என்றும் பாராமல் காவல் துறையினர் தாக்கி சாலையில் இருந்து மருத்துவமனையின் வளாகத்திற்குள் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் அடித்து, விரட்டி, தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com