தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். பதவி ஓய்வு பெறும் நிலையில், ஒரு முக்கிய கடிதம் ஒன்றை மாணவர்களுக்கு எழுதியுள்ளார். இந்த கடிதம் பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், சபாஷ் போடவும் வைத்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், இன்று ஓய்வு பெறுகிறார்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளிக்கு, தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'பள்ளி மாணவர்கள் மின்னணு உபகரணங்களில் அதிகமாக வாசித்து வருகின்றனர்.
இதனால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக புரிந்து கொள்ளமுடியவில்லை.
எனவே, மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த வேண்டும்.
அதில் ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கி ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும். தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்படமுடியும்.
மேலும், சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம். இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை கொடுத்து உற்சாகப்படுத்தலாம்.
இது, மாணவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனை மற்றும் ஆக்கபூர்வமான செயல்களுக்கு விதையாக இருக்கும். எனவே, இதுபோன்ற நல்ல பழக்க வழங்களை விரிவாக செய்து உதவ வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
நேர்மையான அரசு அதிகாரி என பெயர் எடுத்த வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., அனைத்து கட்சி சார்பிலும் பாராட்டு பெற்றவர். எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்றும் போற்றப்படுபவர். மேலும், இளைஞர்களுக்கு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்து வருவதால், இன்றைய இளைஞர்களின் "ரோல் மாடலாக" திகழ்ந்து வருகிறார்.