திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.
இதன் பிறகு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசும்போது ‘பொதுமக்கள் அரசின் அனைத்து திட்டங்களை பற்றி தெரிந்து அனைத்திலும் பயன்பெற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் கற்க வேண்டும்.
தனியார் பள்ளிகளை நாடாமல் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும். மாணவ மாணவிகள் தமிழ் வழியில் படித்தாலும் மருத்துவர் ஆகலாம். கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்’ என தெரிவித்தார்.
இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 254 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
இந்த முகாம் முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது நாட்றம்பள்ளி கோட்டாட்சியர் லட்சுமி தேசீய கீதம் பாடாமல் பொதுமக்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்ட சக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, ‘அரசு உயர் அதிகாரியே தேசிய கீதத்தை அவமதிக்கலாமா?’ என ஒருவருக்கொருவர் கேள்வியெழுப்பியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.