டன் கணக்கில் கடத்தப்படும் செம்மண் - ஆர்.டி.ஓ விளக்கம் என்ன?

அரசு அதிகாரிகளுக்கு தி.மு.க-வினர் லஞ்சம் கொடுத்து செம்மண் கடத்தி வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண் கடத்தல்
மண் கடத்தல்

உசிலம்பட்டி பகுதியைச் சுற்றி சவுடுமண் எடுப்பதற்காக அனுமதி பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து செம்மண்ணை தி.மு.க-வினர் அள்ளி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆலம்பட்டி தினேஷ் பேசும்போது, ‘மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, போடுவார்பட்டி ஊராட்சியில் சர்வே எண் 231/1&231/2, 1.80 ஹெக்டர் பட்டா நிலத்தின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, என். அய்யம்பட்டி, நாட்டார்மங்கலம் என்கிற முகவரியில் வசிக்கும் சிவநாத்பாபு என்பவர் மணல் அள்ளுவதற்காக புவியியல் மற்றும் சுங்கத்துறை ந.க. எண் 1517 கனிமம் 2022 நாள் 25/04/2023 மூலம் 05/07/2023 முதல் 02/09 /2023 முடிய மணல் அள்ள அனுமதி பெற்றுள்ளார்.

அனுமதித்த இடத்திற்கு மேல் முறைகேடாக தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் ஊர்க்காலன், வீரத்தேவன் மற்றும் அப்பு என்ற நபர்கள் மற்றும் பலர் ஆளும்கட்சியின் துணையோடு மேற்படி அனுமதி சீட்டை வைத்து அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடுவார் பட்டி கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான மலைப் பகுதியில் உள்ள மரங்களை அழித்து அப்பகுதியை சுற்றி மண் அள்ளி வருகிறார்கள்.

இப்பகுதி வன விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் மண் திருட அதிகாரிகள் மாஃபியாக்களோடு கைகோர்த்து நிற்பது வேதனையாக இருக்கிறது.

சினிமா படத்தில் ஆந்திரா கடப்பா பகுதிபோல் காட்டப்படும் அதளபாதாளம்போல் லாரியே மூழ்கிப் போகும் அளவிற்கு மண் அள்ளியிருப்பதை வீடியோ காட்சிகள் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதைப் பார்க்கும்போது மனது பதைபதைக்கிறது. எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாமல் போகும். அரிசி விலை 5 ஆயிரத்தை தாண்டினாலும் ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்.

அரசு ஊழியர்களான வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை எல்லாம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு மலையை அழிக்கக் காவல் காப்பது தி.மு.க ஆட்சிக்குக் கரும்புள்ளி.

இந்த மணல் கொள்ளையில் மா.செ மணிமாறன், ஒ.செ அஜித் பாண்டி , எம்.எல்.ஏ அய்யப்பன் கட்சி பாரபட்சம் இல்லாமல் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

மேற்படி செம்மண் அள்ளும் நபர்கள் தி.மு.க-வை சேர்ந்தவர்கள், ஊர்க்காலன், வீரத்தேவன் மற்றும் அப்பு ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளுவதைத் தடுத்து மேற்படி அனுமதிச் சீட்டினை ரத்து செய்து, இயற்கை வளங்களைக் காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ‘இதுதொடர்பாக முதல்வருக்குப் புகார் மனு அனுப்பி இருக்கிறோம்’ என்றார்.

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘உசிலம்பட்டி அருகிலுள்ள போடுவார் பட்டி கிராமத்தில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் சொல்லும் மலைப்பகுதியில் மண் அள்ள அனுமதி வழங்கவில்லை. உடனே வி.ஏ.ஓ வை அனுப்பி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்கிறார் உற்சாகமின்றி.

- பாலமுருகன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com