குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் பகுதியில் அமுதம் அரசு நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் 1,400 -க்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர்.
அதிக அளவில் பயனாளிகளைக் கொண்ட இந்த கடையில் பணி புரியும் ஊழியர்கள் சரியாக கடையை திறக்காமல் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்காமலும் இருந்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக பல புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அந்த கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களை வட்டவழங்கல் துறை அதிகாரி இடமாற்றம் செய்தார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப 2 புதிய பணியாளர்களை பணியமர்த்தினார்.
இந்த நிலையில், இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 4 -ம் தேதி ஆன நிலையிலும் இதுவரை கடை திறக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்த நிலையில் இன்று காலை மழையும் பொருட்படுத்தாமல் ரேஷன் கடை முன்பு பொருட்கள் வாங்க காத்திருந்தனர் .
காலை 10 மணி கடந்த பின்பும் கடை திறக்கபடாமல் இருப்பதை கண்ட பொதுமக்கள் வட்டவழங்கல் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய கிள்ளியூர் வட்ட வழங்கல் தாசில்தார் வேணுகோபால் வந்தபோது கடை திறக்கபடாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே, ரேஷன் கடை ஊழியரை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார். துறை அதிகாரி கடைக்கு வந்திருப்பதை தெரிந்து கொண்ட ஊழியர் அலறியடித்து கொண்டு கடைக்கு வந்தார். அப்போது ஊழியர் கடையை திறக்க முயன்றபோது, கடையின் சாவி மாறி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, பூட்டை சுத்தியலால் உடைத்து கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய அதிகாரி உத்தரவிட்டார். மேலும், பணியில் அலட்சியமாக இருந்த கடை ஊழியரை எச்சரித்து சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.