ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சுவால் பேட்டையில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்கு ஓய்வுபெற்ற எஸ்.ஐ விநாயகம் பணம் எடுக்க சமீபத்தில் போயுள்ளார். அப்போது அவருக்கு கண் பார்வை கொஞ்சம் மங்கலாக தெரிந்ததால் தடுமாறியிருக்கிறார்.
அருகில் இருந்த வாலிபர், ‘சொல்லுங்க சார். நான் பணம் எடுத்துக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி, அவரது ஏ.டி.எம் கார்டை வாங்கி, ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்துகொண்டார்.
இதன் பிறகு விநாயகம் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்த வாலிபர் அவரின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பணம் இருப்பதை அறிந்துகொண்டு வேறு கார்டை அவரது கையில் மாற்றி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் விநாயகத்தின் கார்டில் இருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். இந்த விவரம் விநாயகத்திற்கு தெரியவில்லை. இதனால் அவர் மறுபடியும் ஏ.டி.எம் மையத்துக்கு பணம் எடுக்க போனபோது போலி கார்டு வேலை செய்யவில்லை.
உடனே அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விநாயகம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து ஏ.டி.எம் மையத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் இருந்த அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அரக்கோணம் ஏ.எஸ்.பி கிரீஷ் அசோக் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் அந்த வாலிபர் ஆந்திர மாநிலம் கொல்லக்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மொத்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.