ராணிப்பேட்டை: கொரியரில் வந்த போதைப் பொருள் - இளைஞர்கள் சிக்கியது எப்படி?

ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகள் வீதம் 300 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
ராணிப்பேட்டை: கொரியரில் வந்த போதைப் பொருள் - இளைஞர்கள் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டையில் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பைக்கில் வந்த மூவர் போலீசை பார்த்ததும் பைக்கை வேகமாக திருப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது, ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசார் பைக்கை சோதனை செய்தபோது மருந்து அட்டை போல 30 அட்டைகள் இருந்தது. ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகள் வீதம் 300 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் வாலாஜா கலால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் ராணிப்பேட்டை பால் சுனில், தனுஷ், நவல்பூர் அமீன் எனத் தெரியவந்தது. இந்த மூவரும் பிளஸ்-2 வரை படித்துள்ளனர். ஒரே வகுப்புத் தோழர்கள். வீட்டில் எங்கும் போதை மாத்திரைகள் ஸ்டாக் வைக்காமல் தினசரி தேவைக்கு ஏற்ப பெங்களூரில் போதைப் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு கூகுள்- பே -வில் பேமென்ட் அனுப்பி வைக்க, அவர்கள் கூரியரில் போதை மாத்திரைகள் அனுப்பி வந்துள்ளனர்.

இந்தப் போதைப் பொருட்களை பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களை பிடித்து நேரடியாக விற்று வந்துள்ளனர். உடனடியாக மூவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கடந்த வாரம் வாலாஜா பேட்டையில் அதேபோல் கூரியரில் போதை மாத்திரைகளை வாங்கி விற்று வந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது கூரியர் சர்வீசையும், பெங்களூரில் இருந்து போதை மாத்திரைகள் சப்ளை செய்யும் ஏஜெண்டுகளையும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

-அன்புவேலாயுதம்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com