ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த எக்கு நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் தார்ச்சாலை போட கறுப்பு நிற தார் பேரல்களை இறக்கியுள்ளனர். அதில் ஓட்டையாக உள்ள பேரல்களிலிந்து கடும் வெயிலில் தார் உருகி சாலையோரம் உள்ள குட்டை போன்ற பகுதிகளில் நிரம்பியுள்ளது. அந்தப்பகுதியில் புல்லை மேய்ந்து கொண்டிருந்த மூன்று கன்று குட்டிகள் விபரீதம் தெரியாமல் தாரில் தெரியாமல் காலை வைத்துள்ளன.
அப்படியே கன்று குட்டிகளின் கால்களை இறுக்கமாக தார் பிடித்துக்கொள்ள, செய்வதறியாமல் முன்னுக்கும், பின்னுக்கும் உடலை வளைத்து போராடி, கடைசியில் நிலை தடுமாறி உருகிய தாரிலேயே விழுந்து விட்டன. எழு முயற்சி செய்த கன்று குட்டிகள் கொஞ்சமும் அசைய முடியாமல் கத்திக் கதறின. அந்தப் பக்கம் சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். கன்றுவின் கண்களில் வழிந்த நீர் காண்போரின் நெஞ்சை கரைய வைத்தது. ஆனால் உருகி, இறுகிப்போன தாரை கரைக்க முடியவில்லை. தீயணைப்பு துறையினர் மண்ணெண்ணையை கொஞ்சம், கொஞ்சமாய் விட்டு ஒவ்வொரு கன்று குட்டியாய் அசைத்து, அசைத்து எடுத்தனர்.
ஏதும் புரியாமல் அந்த கன்றுகள் உடலோடு ஒட்டிய தாரோடு மிரட்சியாய் பார்த்தபடி சென்றன. தார் ரோடு போடும் ஆபிசர்ஸ், தார் பேரல்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
-அன்புவேலாயுதம்