ராணிப்பேட்டை: தண்ணீரை தேடிவந்து உயிரிழக்கும் மான்கள் - அதிர்ச்சி நிலவரம்

ராணிப்பேட்டை அருகே தண்ணீர் தேடி வரும் மான்கள் ரயில் அடிப்பட்டு உயிரிழக்கும் சம்பங்கள் அதிகரித்துள்ளதால் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை: தண்ணீரை தேடிவந்து உயிரிழக்கும் மான்கள் - அதிர்ச்சி நிலவரம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் வனப்பகுதி உள்ளது. இது ரயில்வே இருப்புப் பாதைகளுக்கு அருகில் இருக்கிறது. இந்த வனத்தில் அதிக அளவில் புள்ளி மான்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மழை கலத்தில் மான்கள் பெரும்பாலும் வனத்தை விட்டு வெளியில் வருவதில்லை. ஆனால் கோடை காலத்தில் தண்ணீர் தேடி வனத்திற்கு வெளியில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு மான்கள் வருவது வாடிக்கையாக உள்ளது.

அப்படி வரும் மான்கள் தண்ணீர் குடித்து முடித்தாலும் மறுபடி வனத்திற்குப் போக வழி தெரிவதில்லை. சில சிறுவர்கள் விளையாட்டுத்தனமாய் மான்களைத் துரத்தி விளையாடினாலும் ஆபத்தில்லை. ஆனால் மிரண்டு ஓடும் மான்களைச் சில தெருநாய்கள் துரத்தி கடித்துக் குதறி மரணத்தை ஏற்படுத்துகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க தண்டவாளங்களைக் கடக்கும் மான்கள் ரயிலில் அடிபட்டுப் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் அப்படி இறந்த மான்களின் எண்ணிக்கை 7. சமூக ஆர்வலர்கள் பலர் இது குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் சரவணனிடம் பேசினோம். "வனத்தில் தண்ணீர் தொட்டிகள் உள்ளது. அதில் தண்ணீரும் நிரப்பியுள்ளோம். மேலும் சில தொட்டிகள் வைத்து தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அத்துடன் சோலார் மின்சாரம் மூலம் ஆபத்தில்லாத மிக லேசான ஷாக்கடிக்கும் மின் வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வன உயிரினங்களைக் காப்பாற்றும் பொறுப்பு வனத்துறைக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் உள்ளது. உடனடியாக எங்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும்" என்றார்.

- அன்புவேலாயுதம்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com