சென்னையில் இருந்து ரயில் மூலம் கடத்தப்பட்ட பல இலட்சம் மதிப்பிலான சுறா பீலிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வந்த ரயிலில் மூட்டை மூட்டையாக ராட்சத பீலி சுறா இறகுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட வனத்துறை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ரயில் நிலையத்திலிருந்து மாருதி வாகனத்தில் சுறா இறகுகள் ஏற்றுவது கண்டறியப்பட்டது. உடனடியாக அதனை தடுத்து நிறுத்தி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், இருவர் ரயிலில் சுறா பீலிகளை ஏற்றி கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்த சுமார் 350 கிலோ அளவிலான ராட்சத பீலி சுறா இறகுகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
தொடர்ந்து பிடிபட்ட நபர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தான் அதிக அளவு அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இங்கிருந்து தான் பல இடங்களுக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது, தொடர்புடையர்கள் யார், இதன் பின்னணி விபரங்கள் என்ன என்பது பற்றி வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட பொருளா என்பது பற்றியும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.