அமைச்சர், எம்.பி கடும் மோதல்: கீழே தள்ளிவிடப்பட்ட கலெக்டர் - என்ன நடந்தது?

தமிழக அமைச்சர், எம்.பி இடையே ஏற்பட்ட கடும் மோதலில் மாவட்ட ஆட்சியர் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தள்ளிவிடப்பட்ட ஆட்சியர்
தள்ளிவிடப்பட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு தாமதமாக வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியிடம் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ‘ஏன் தாமதமாக வந்தீர்கள்?’ என கேட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமைச்சர் ராஜ கண்னப்பனுக்கும், நவாஸ் கனி எம்.பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சரமாரியாக கடுமையாக பேசிக் கொண்டுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உடனடியாக தலையிட்டு சமாதானம் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது அருகில் நின்றிருந்த எம்.பி-யின் ஆதரவாளர் மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மாவட்ட ஆட்சியரை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் தன்னை தள்ளிவிட்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நவாஸ்கனி எம்.பி கூறுகையில், 'கலெக்டர்தான் இந்த பிரச்னைக்கு காரணம். அவர் மீது தலைமை செயலரிடம் புகார் கொடுத்திருக்கிறேன்' என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com