ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாம்பன் பாலம் அருகில் கடற்கரையின் ஓரம் இயறக்கையை ரசிக்கும் வண்ணம் ஒரு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பான அரசு திட்டம், ஆனால் இந்த பூங்காவை மண்டபம் பேரூராட்சி அதிகாரிகள் ஆதாயமாக்கும் பணியில் ஈடுபட்டதாக பெரியார் பேரவை தலைவர் க.நாகேசுவரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்று. அதிலும் பாம்பன் பாலம் பலரையும் ஈர்த்த ஒன்று. அதன் அருகாமையில் இருக்கும் இந்த சிறுவர் பூங்காவிற்க்கு பல சுற்றுலா பயணிகள் வந்து சற்று இளைப்பாறி செல்வது வழக்கம். இதனை அறிந்த அதிகாரிகள் அரசின் அறிவிப்பின்றியே சுற்றுலா பயணிகளிடம் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து கல்லா கட்ட துவங்கினர். இதுபோக, மேற்கொண்டு உள்ளே செல்வதற்க்கு ஒரு நபருக்கு 10 என தனியாக நுழைவு கட்டணமும் வசூலித்து உள்ளார்கள். உண்மை அறியாத வெளியூர் மக்களும் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர்.
ஆனால் உள்ளே சென்ற மக்களுக்கு அதிர்ச்சி! இவ்வளவு செய்த அதிகாரிகள் பூங்காவை பராமரிக்க தவறி விட்டார்கள். நீச்சல் குளத்தின் வடிவத்தில் சாக்கடையும், கழிவு நீரும் நிரம்பி இருக்க, பூக்களால் சூழ வேண்டிய பூங்கா குப்பைகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் நிலைமை காசை கொடுத்து நோயை வீட்டிற்க்கு அழைத்துச் சென்றது போல் ஆகிவிட்டது.
இந்நிலையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுவர் பூங்காவை பராமரித்து சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியார் பேரவையும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து பெரியார் பேரவை தலைவர் க.நாகேசுவரன் கூறுகையில், ”அதிரடி நடவடிக்கை தேவை, அதிகாரிகள் தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அதிரடியாக போராட்டங்களை அறிவிக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.