ராமநாதபுரம்: ஏலச்சீட்டு நடத்தி 211 பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த பலே கில்லாடி - அதிர்ச்சி புகார்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
சாயல்குடி அருகே உள்ள தரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம். இவர், தரக்குடியில் இருந்து கொண்டு சாயல்குடி, கடலாடி, நரிப்பையூர், விளாத்திகுளம் மற்றும் ஆப்பனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்த செய்யது இப்ராஹிம், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மக்களின் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பே பணத்தை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு அளித்துள்ளனர். 211 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், செய்யது இப்ராஹிம் 8 கோடி 50 லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால், செய்யது இப்ராஹிம் மீது இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட பொது மக்கள் சாயல்குடி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு, ஏலச்சீட்டு மோடி நபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர். தகவல் அறிந்த கீழக்கரை டி.எஸ்.பி. சுதீர்லால் மற்றும் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சுலைமான் ஆகியோர் பாதிக்கப்பட்ட நபர்களிடம், மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கம் அளித்தனர். இதனால், கூட்டத்தினர் அனைவரும் கலந்து சென்றனர்.