நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, முன்விடுதலையான நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையான நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் இருக்க விரும்புவதால், அங்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு ஆன்லைன் மூலமாக ஜூன் 12ஆம் தேதி விண்ணப்பித்து, ஜூன் 14ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை சரிபார்ப்பிற்கு பிறகு பாஸ்போர்ட் வழங்கபடும் என பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது திருவான்மியூரில் வசிக்கும் வீட்டிற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி திருவான்மியூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி சென்ற நிலையில், தற்போது வரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என மனுவில் கூறியுள்ளார்.

எனவே காவல்துறை சரிபார்த்த விவரங்களை பாஸ்போர்ட் அதிகாரிக்கு அனுப்பவும், பாஸ்போர்ட் வழங்கும்படி பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிடவும் வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், சரிபார்த்த விசாரணை அறிக்கையை பாஸ்போர்ட் அதிகாரியிடம் ஆகஸ்ட் 11ம் தேதி அளித்துவிட்டதாகவும் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நீதிபதி, நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com