ராஜ் பவன் என்றும் மக்களுக்கானது என்றும் அனைத்து மாநில விழாக்களையும் நாம் கொண்டாட வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சிக்கிம் மாநில உருவான தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிக்கிம் மாநிலத்தவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.
இந்த விழாவில் கலந்து கொண்டு சிக்கிம் மாநிலத்தவர்களுடன் உரையாடினார். மேலும் சிக்கிம் மாநில உருவான தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ”சமூக கலாச்சார ஒன்றிணைப்பு இந்தியர்களுக்கு இயல்பிலேயே இருக்கிறது. மற்ற மாநிலத்தவர்களின் விழாக்களையும், நாம் கொண்டாட வேண்டும்.
விழாக்கள், கொண்டாட்டங்களே நம்மை இணைக்கின்றன. ஆகையால், நிறைய இடங்களில் உள்ளவர்களுடன் கலாச்சார ஒருங்கிணைப்பில் ஈடுபட வேண்டும். மேலும் அரசியல் அடிப்படையில் மாநிலங்கள் உள்ளது. கலாச்சார அடிப்படையில் நமக்குள் ஒற்றுமை உள்ளது.
அனைத்து மாநில விழாக்களையும் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆகையால் அனைத்தையும் கொண்டாடுவோம். ராஜ் பவன் என்றும் மக்களுக்கானது. மேலும், காசி தமிழ் சங்கமம் இந்திய ஒருமைப்பாட்டை இணைக்கும் விழா” என்றார்.