தரைப்பாலத்தை சூழ்ந்த மழைநீர்: 20 கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்

60 நாட்களில் தரைப்பாலம் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும்
தரைப்பாலம் அமைக்கும் பணி
தரைப்பாலம் அமைக்கும் பணி

செங்கல்பட்டு அருகே தரைப்பாலத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்ததால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையே ரெட்டிபாளையம் பகுதியில் தரைப்பாலம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின்போது ரெட்டிபாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் பாலூர், ரெட்டிபாளையம், சாஸ்தரம்பாக்கம், வெண்பாக்கம்,கரும்பாக்கம், கொளத்தூர், வெங்கடாபுரம், வடக்குபட்டு, தேவனூர், வில்லியம்பாக்கம், குருவன்மேடு என சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக மீண்டும் இந்த பகுதியில் புதிதாக தரைப்பாலம் அமைக்க கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையிலான ரெட்டிபாளையத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.ஆனால் தற்போது இந்த தரைபாலப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் தரைபாலப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையிலான 20 கிராம மக்களின் போக்குவரத்திற்கு நெடுஞ்சாலை அதிகாரிகள் தடைவித்துள்ளனர்.இதனால் அவசர உதவிக்கு கூட 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது.பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்பவர்கள் 8 முதல் 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய தூரத்தை செங்கல்பட்டு வழியாக 25 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இதனால் கூடுதலாக 15 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், 18 மாதங்களாக ஆமை வேகத்தில் இந்த பகுதிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.தரைப்பாலம் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் சிலர் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.

எனவே செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையிலான ரெட்டிபாளையம் தரைபாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரெட்டிபாளையம் தரைபாலம் பணிகள் குறித்து ஒப்பந்தார் ஜானகிராமனிடம் தொலைபேசியில் பேசிய போது, ”மழையின் காரணமாக தரைப்பாலத்தை சுற்றி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து குறைந்த உடனே மீண்டும் தரைபாலப் பணிகள் துவங்கப்படும். மேலும் 60 நாட்களில் தரைப்பாலம் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com