மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய்: ஒப்பந்ததாரரின் பலே ஐடியா - பொதுமக்கள் அதிர்ச்சி

இதுபோன்று வடிகால்வாய் கட்டினால் மழைநீர் எப்படி வெளியேறும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மின் கம்பம் அகற்றப்படாமல் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்
மின் கம்பம் அகற்றப்படாமல் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்

வரதராஜபுரம் ஊராட்சியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

சென்னை புறநகரை ஒட்டி வரதராஜபுரம் ஊராட்சி அமைந்துள்ளதால் இங்கு லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வருடம்தோறும் பருவ மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக ஊராட்சியில் ஆங்காங்கே மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் புவனேஸ்வரி நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது.

அப்போது கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே நடுவில் வைத்து மழைநீர் வடிகால்வாய்யை கட்டியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கால்வாய் அமைக்கும் பணியின் போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இதுகுறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதுபோன்று வடிகால்வாய் கட்டினால் மழைநீர் எப்படி வெளியேறும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுசம்பந்தமாக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com