புதுக்கோட்டை:தற்கொலை செய்த கர்ப்பிணி- கணவரின் வீட்டு வாசலில் உடல் புதைப்பு

அன்னவாசல் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட கர்ப்பிணியின் உடல் கணவரின் வீட்டு முன்பு புதைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி நாகேஸ்வரி
தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி நாகேஸ்வரி

அன்னவாசல் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 8 மாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டார். பெண்ணின் மரணத்திற்கு நீதி வேண்டி கணவரின் வீட்டு வாசலில் உடல் புதைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டி மேட்டுக்களம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும் குளத்தூர் அருகே உள்ள மேலசவேரியார் பட்டினத்தை சேர்ந்த குமரன் மகள் நாகேஷ்வரி (23) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நாகேஷ்வரி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சில நாட்களில் நாகேஷ்வரிக்கு வளைகாப்பு நடக்க இருந்த நிலையில், நாகேஷ்வரிக்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததது. இதனால் கர்ப்பிணியாக இருந்த நாகேஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, நாகேஷ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அன்னவாசல் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 9-மாதமே ஆவதால் இதுகுறித்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்ச்சியர் குழந்தைசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை நாகேஷ்வரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நாகேஷ்வரியின் உடலை அன்னவாசல் அருகே உள்ள மேட்டுக்களம் பகுதியில் உள்ள கணவர் அரவிந்த் வீட்டு வாசலில் குழி தோண்டி புதைத்தனர். இதை தடுக்க குவிக்கப்பட்ட போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அதன் பின்னர் நாகேஷ்வரியின் உறவினர்கள், நாகேஸ்வரியின் கணவர் அரவிந்த் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி புதுக்கோட்டை புறவழிச்சாலையில் கீரனூர் அருகே உள்ள குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - புதுக்கோட்டை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களை அப்புறப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்து சிலர் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கே மேலும் பதற்றம் கூடியது. பின்னர் போலீசாரின் சமாதான நடவடிக்கைகளை அடுத்து கூட்டம் கலைந்தது.

கணவர் அரவிந்த் வீட்டு வாசலில் புதைக்கப்பட்ட நாகேஷ்வரியின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுமா அல்லது அங்கேயே வைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com