பிள்ளைகளில் ஆண் என்ன பெண் என்ன அன்புடன், கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்ட குழந்தை யாராக இருந்தாலும் எந்த வயதிலும் பெற்றோருக்கு உதவியாக இருந்து குடும்பத்தை முன்னேற்றும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் அபிநயா.
புதுக்கோட்டை அருகே உள்ள மச்சுவாடியை சேர்ந்த அடைக்கலராஜ் - அஞ்சலை தம்பதிக்கு அபிநயா, தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி என மூன்று பெண் குழந்தைகள். இவர்களில் மூத்தவரான அபிநயா டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார். தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தங்கை தமிழ்ச்செல்வி ஒன்பதாம் வகுப்பும், முத்துலட்சுமி எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
தாய், தந்தை இருவருக்குமே கூலி வேலைதான். காலையிலிருந்து மதியம் வரை விறகு உடைக்கும் வேலை. உடைக்கப்பட்ட விறகின் அளவுக்கு ஏற்றார் போல் கூலி என்பதால் கணவன்- மனைவி இருவரும் இணைந்து வேலை செய்வார்கள். இப்போது பரீட்சை முடிந்து பள்ளி விடுமுறை விட்டிருக்கிறது. அபிநயா பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கிறார் என்பதால் அவரும் இணைந்து இந்த வேலைகளை செய்கிறார். காலையிலிருந்து மதியம் வரை நிஜாம் காலனி பகுதியில் விறகு உடைக்கும் வேலைக்கு போகும் இவர்கள், மதியம் மச்சுவாடி பகுதியில் உள்ள எஸ்டேட் ஃபேக்டரியில் ஈயக்கட்டிகளை உடைத்து தூளாக்கும் வேலையை செய்கிறார்கள். இந்த வேலை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கும். இத்தனை டன் ஈயத்தை உடைத்து தூளாக்கிக் கொடுத்தால் இவ்வளவு ரூபாய் என்று கூலி என்பதால் இங்கும் பெற்றோருக்கு உதவியாக அபிநயா வேலை செய்கிறார்.
பிள்ளைகளில் ஆண் என்ன பெண் என்ன அன்புடன், கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்ட குழந்தை யாராக இருந்தாலும் எந்த வயதிலும் பெற்றோருக்கு உதவியாக இருந்து குடும்பத்தை முன்னேற்றும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் அபிநயா. ஏற்கனவே பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளில் 380 க்கு மேல் மார்க் வாங்கிய அவர் தற்போது ''450 மார்க்குக்கு மேல் வரும். நன்றாகப் படித்து குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம்'' என்று சொல்கிறார்.
வறுமை உணர்ந்த பிள்ளைகள்: வாழ்வில் வந்த வரங்கள்.
-ஷானு