புதுக்கோட்டை: மஞ்சு விரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலர் - 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீட்டிலிருந்து காவலரின் உடலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் தோளில் சுமந்த படி மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
புதுக்கோட்டை: மஞ்சு விரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலர் - 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
Jesbel Eslin

மஞ்சு விரட்டு போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணனின் உடல், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி LNபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் மீமிசல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று திருமயம் அருகே கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டிக்கு பாதுகாப்பு பணிக்காக காவலர் நவநீதகிருஷ்ணன் சென்றிருந்தார். மைதானத்தில் பாதுகாப்பின்றி இருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று காவலரின் விலாவில் குத்தியதில் காவலர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து, காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காவலர் நவநீதகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மஞ்சு விரட்டு போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீட்டிலிருந்து காவலரின் உடலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் தோளில் சுமந்த படி மயானத்திற்கு எடுத்து சென்றனர். இதையடுத்து, காவலரின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த காவலர் நவநீத கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com